முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்றரை மணி நேரம் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டனர். செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக் ஷவின் 'சிரிலிய சவிய' அமைப்புக்கு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவு தீவிர விசாரணைகளை
முன்னெடுத்ததாகவும், இதன் போது விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்த பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் ஷிரந்தி - மஹிந்த தம்பதியின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும், அது தொடர்பில் அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டினார்.
'சிரிலிய சவிய' அமைப்பின் கீழ் பாவனையிலிருந்த செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடி மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல, பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நேற்று அது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த 'சிரிலிய சவிய' அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்புக்கு இணங்க அவர் நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். தனது இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர் படுத்திய பின்னர், தனது கணவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மகனான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஆகியோர் சகிதம் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகினார்.
ஆதாரவாக ஆர்ப்பாட்டம்
இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடினர். அவர்கள் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி, ஷிரந்திக்கு எதிரான விசாரணைகள் அரசியல் பழி வாழங்கல் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நேற்று முற்பகல் முதல் பிற்பகல் 1.30 மணி வரை நிலவிய நிலையில், பிரதேசத்தின் பாதைகள் பல மூடப்பட்டு, அவசர நிலைமையை கையாளத்தக்க வகையில் பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந் நிலையில் அவசியம் ஏற்படும் போது பயன்படுத்த பொலிஸ் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
' ஷிரந்தி மெடமை விட்டுவிட்டு போக மாட்டோம்' எனவும், தற்போதைய விகாரமஹாதேவியான ஷிரந்தியை பழி வாங்காதே எனவும் வலியுறுத்தும் அங்கு கூடியிருந்தோர் கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜீ.எல்.பீரிஸ்., பந்துல குணவர்தன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகியிருந்தனர்.
இந் நிலையிலேயே நேற்று முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 1.15 வரை ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டு விஷேட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பிலான வழக்கில், இதற்கு முன்னர் செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரிகள் பலரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். இதன்போது, குறித்த டிபண்டர் வாகனம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'சிரிலிய சவிய' எனும் அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அந்த வாகனத்தை எதற்கு, எப்படி பயன்படுத்தினர் என்பது தமக்கு தெரியாது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கும் போது இருந்த நிறம் பின்னர் மாற்றப்பட்டுள்ளமையைக் கண்டறிந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதற்கான காரணத்தையும் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணை பிரிவு முன்னெடுக்கும் வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளில், வஸீம் தாஜுதீனின் கொலையுடன் டிபண்டர் வாகனம் ஒன்று தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் அந்த டிபண்டர் வாகனம் எது என துல்லியமாக தெரியவராத நிலையில், 'சிரிலிய சவிய' அமைப்பின் கீழ் இருந்த குறித்த டிபண்டர் வாகனமே அது என பல தரப்பினராலும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக 'சிரிலிய சவிய' டிபண்டர் வாகனம் ஷிரந்தியின் பாதுகாப்பு பிரிவினரால் பயன்படுத்தப்பட்டமை, வஸீமின் கொலை தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சிலர் மீது திரும்பியுள்ள அவதானம், வஸீமின் கொலையைத் தொடர்ந்து குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த டிபண்டர் வஸீம் தாஜுதீன் கொலையுடன் இணைத்து பேசப்பட்டது.
இந் நிலையிலேயே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட ஷிரந்தியிடம் குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை மற்றும் அதன் நோக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தீவிர விசாரணை நடாத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நேற்று சிறப்பு வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படும் பட்சத்தில மீள் விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவர் விடுவிக்கப்பட்டதுடன், அவரது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந் நிலையில் இன்று ஷிரந்தியின் இரண்டாவது மகனும், குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பில் தகவல் அறிந்தவர் மற்றும் அதனை சிறிது காலம் பயன்படுத்தியவர் எனவும் நம்பப்படும் யோஷித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.