சி்றந்த ஆளுமையுடன் மக்களுக்கான பல்வேறு பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளை கொண்டு சேர்க்கும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சரான ஹாபிஸ் நசீர் அஹமட்டே அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என 1 ஏறாவூர் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி குறிப்பிட்டார்,
கிழக்கு முதலமைச்சரின் சேவைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பலர் அவர் செய்கின்ற மக்கள் பணிகளை தூற்றுகின்ற அளவுக்கு காழ்ப்புணர்வுடன் செயற்பட்டு வருவதை பார்க்கின்ற போது அவர்களை மக்கள் பிரதிநிதிகள் என்று கூற முடியமா என்ற கேள்வியெழுவதாக முன்னாள் நகர சபை உறுப்பினர் பாஷித் அலி கூறினார்
நேற்று ஏறாவூரில் கிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் ஐந்து வீதிகளை கொங்கிரீட் இட்டு புரனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு மேலும் உரையாற்றிய நகர சபை உறுப்பினர் பாஷித் அலி,
இதுவரை தாம் முன்னெடுத்த ஏமாற்று அரசியலை இனிமேலும் முன்னெடுக்க முடியாது என்ற காரணத்தால் பலர் முதலமைச்சரை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டித் திரிகின்றனர்.
நான் அவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன் ஏன் நீங்கள் கிழக்கு முதலமைச்சரை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டித் திரிகின்றீர்,
எமது பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று துன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதற்காய் ஆடைத் தொழிற்சாலைகளை நிர்மாணித்து தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகின்றாரே அதனால் தோற்கடிக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
எமது பட்டதாரிகள் வீதியில் இறங்கி வெயிலுலும் மழையிலும் போராடிய போது நீங்கள் எல்லாம் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போது அவர் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சென்று மன்றாடிப் போராடி இன்று பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகின்றாரே அதனால் தோற்கடிக்க வேண்டும் என நினைக்கின்றீரா?
கல்வியியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகள் வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்று செய்வதறியாது திகைத்து நிர்க்கதியாய் நின்ற போது நீங்கள் எல்லாம் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு நின்றீர்களே அப்போது அவர் மட்டும் கல்வியமைச்சுக்குச் சென்று போராடி அவர்களுக்குத் தீர்வினைப் பெற்றுத் தந்தாரே அதற்காய் தோற்கடிக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
எமதூர் வியாபாரிகள் உடைந்த கட்டடத்தில் சேற்றிலும் சகதியிலும் வியாபராம் செய்த போது நாமும் கௌரவமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காய் நவீன வடிவமைப்புடன் மார்க்கட் ஒன்றை கட்டுகின்றாரே அதற்காய் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்கின்றீர்களா?
கலாசார மண்டபம் என்பது எமதூர் மக்களுக்கு வெறும் கனவாய் இருந்த போது அதற்கென நிதியனைப் பெற்று அழகிய நூலகம் மற்றும் கலாசார மண்டபம் ஆகியவற்றை மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் பெயரில் நிர்மாணித்து வருகின்றாரே அதனால் அவரை தோற்கடிக்க நினைக்கின்றீரா?
அல்லது வெறுமனே கிடந்த ஆற்றங்கரையோரத்தை அழகுபடுத்தி அங்கு செய்னுலாப்தீன் வாவிக்கரை பூங்காவை நிர்மாணித்து அதில் அனைவரும் குடும்பமாய் குழந்தைகள் சகிதம் சென்று பொழுதுபோக்க சந்தரப்பத்தை ஏற்படுத்தித் தந்தாரே அதற்காய் அவரை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கீன்றீர்களா?
இப்படி எமக்கு அடுக்கிக் கொண்டே போகலாம் ஆகவே முதலமைச்சரை தோற்கடித்தால் எமது அதிகாரத்தைப் பயன்படுத்தலாமே என்ற சுயலாப அரசியலுக்காய் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் நன்மைகளை தடுக்க நினைக்காதீர்கள்,
மக்களுக்கான சேவைகளை பாரபட்சமின்றி வழங்கி வரும் கிழக்கு மாகாண முதலமைச்சரே தொடர்ந்து முதலமைச்சராய் தொடர வேண்டும் அவரால் கிழக்கு மாகாணம் மென்மேலும் அபிவிருத்தியடைய வேணடும் என்பதே எமது ஒரே அவாவாகும் என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பாஷித் அலி கூறினார்,
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்,