Top News

அதிர்ச்சியுடனும், காயத்துடனும் முடிந்த போல்டின் சாதனை பயணம்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் போனதற்கான காரணங்கள் குறித்து அவரது சக நாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லண்டனில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த 'உலகின் அதி வேக மனிதர்' என்று கருதப்படும் உசைன் போல்ட் 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.

இப்போட்டிதான் இவர் கலந்து கொள்ளும் கடைசி தடகள போட்டி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உசைன் போல்ட் பங்கேற்கும் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் போட்டியின் போது 4-ஆவது நபராக ஆக ஓடிய உசேன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இப்போட்டியில் , ஜமைக்கா அணியின் சார்பாக மூன்றாவது நபராக ஓடிய யோஹான் பிளேக் இது குறித்து கூறுகையில், ''இப்போட்டி 10 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது. நாங்கள் 40 நிமிடங்கள் போட்டி தொடங்குவதற்காக காத்திருந்தோம்'' என்று தெரிவித்தார்.

''எங்களை அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க செய்தனர்'' என்று யோஹான் பிளேக் மேலும் கூறினார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள உசைன் போல்ட், இத்தொடரில் தன்னால் இரண்டு தங்கப் பதக்கங்கள் வெல்ல முடியும் என்று நம்பினார்.

ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் பெற்ற வெண்கலப் பதக்கம் மட்டுமே தனது கடைசி தொடரில் போல்ட் பெற்ற ஒரே பதக்கமாகும்.

இது குறித்து 2011-ஆம் ஆண்டின் உலக சாம்பியன்ஷிப் 100 மீட்டர் பட்டத்தை வென்ற யோஹான் பிளேக் மேலும் கூறுகையில், ''எங்களது போட்டிக்கு முன்னர் இரண்டு பதக்க பரிசளிப்பு விழாக்கள் நடந்தன. நாங்கள் தொடந்து காத்துக் கொண்டும், எங்கள் போட்டிக்கு தயாராகி கொண்டும் இருந்தோம் என்று குறிப்பிட்டார்.

போட்டி தொடங்க மிகவும் தாமதமானது உசைன் போல்டின் காயத்திற்கு காரணமாகவும் பிளேக் குறிப்பிட்டார்.

''உசைன் போல்ட் போன்ற ஒரு சாதனையாளர் இவ்வாறு காயமடைந்து போட்டியில் இருந்து வெளியேறியதை காண்பதற்கு மனம் மிகவும் வருந்தியது'' என்று யோஹான் பிளேக் குறிப்பிட்டார்.

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் இது குறித்து கூறுகையில், ''உசைன் போல்ட் மிகச் சிறந்த வீரர். அவருக்கு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கும் நேரமிது. அவருக்கு காயம் ஏற்பட்டதற்கு நான் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பிரிட்டன் அணி தங்கப்பதக்கம் வென்றது.
Previous Post Next Post