Top News

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம்


கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படும் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முற்றுகைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக பல்கலைக்கழகத்திற்கு அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு தங்கள் போராட்டத்தைப் பற்றி தெளிவூட்டும் வகையில் பல்கலைக்கழகத்தில் இருந்து ஏறாவூர் நகர சபை வரையில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். 

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், தற்போது அதில் இரண்டு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் 100 நாட்களையும் கடந்துள்ளதுடன், நிர்வாகக் கட்டிட முற்றுகைப் போராட்டம் 21 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் எவ்வித தீர்வும் கிடைக்கப்படாமல் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதைக் கண்டித்தும், மாணவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், மக்களுக்கு மாணவர்களின் போராட்டம் பற்றி தெளிவூட்டுவதற்காகவும் மேற்படி பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். 

இப்பேரணி நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இதன் போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லியனாராச்சி கருத்துத் தெரிவிக்கையில், 

மாணவர்களின் உரிமை தொடர்பான போராட்டத்திற்கு இதுவரையில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் நிர்வாகத்தால் எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து செயற்படுவார்களாயின் தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாத்திரமே எம்முடன் ஆதரவிற்கு வந்துள்ளது. இனிவரும் காலங்களில் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவையும் பெற்று எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் என்று தெரிவித்தார். 
Previous Post Next Post