Top News

மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசு தோண்டி எடுக்கப்பட்டது




 (க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசு ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய 14.08.2017 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார முன்னிலையில் இந்த சிசுவை லிந்துலை பொலிஸார் உடன் பொது மக்கள் உதவியை கொண்டு மதியம் 2 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பகுதியில் 23 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு அதிக குருதிப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக அப்பெண் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு இவ் பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் தான் சிசுவை பெற்றெடுத்ததால் குருதி போக்கு ஏற்பட்டு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

பெற்றெடுத்த சிசு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போது, சிசு உயிரிழந்து தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில் இச்சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர். சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஆகியோரையே லிந்துலை பொலிஸாரின் ஊடாக கைது செய்தனர்.

சம்பவத்தில் சிசுவை புதைத்த இடத்திலிருந்து மீட்பதற்கு லிந்துலை மற்றும் நுவரெலியா பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை 13.08.2017 அன்று பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் தயா நாணயக்கார தலைமையில் சிசு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 14.08.2017 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் உடலத்தை நீதிமன்ற அனுமதியுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த லிந்துலை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.


Previous Post Next Post