2017ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளில் எந்த விதமான குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தில் சமுர்த்தி வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் அதிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்றும், பயனாளிகளின் எண்ணிக்கையில் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என்றும்
அமைச்சர் உறுதியளித்தார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன எம்.பி நேற்று முன்தினம் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதில் வழங்கும்போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
சமுர்த்தி பயனாளிகள் குறைக்கப்பட்டிருப்பதுடன், அரசியல் நோக்கங்களுக்காக தமக்கு வேண்டியவர்கள் பயனாளிகள் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருப்பதாக தினேஷ் குணவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும், அவ்வாறான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த வருடத்திலோ அல்லது அடுத்த வருடத்திலோ பயனாளிகளின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதுடன், எவரும் இத்திட்டத்திலிருந்து நீங்கப்படவில்லையென்றும் கூறினார்.
இருந்த போதும் சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் கணிப்பீடொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், இது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 14 இலட்சத்துக்கும் அதிகமான சமுர்த்தி பயனாளிகள் இருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சமுர்த்தி நிவாரணத்துக்காக 12 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டன.
எனினும் எமது அரசாங்கம் இந்த எண்ணிக்கையை 42 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் ஒரு வீதம் கூட குறைவடையாது.