Top News

மணல் அகழ்வு, மரம் வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை ஆற்றுப் பகுதிகளில் மணல் அகழ்வதைக் கண்டித்தும் புலுட்டுமானோடை, வெரச்சியாறு, உடும்புக்கல்ஆறு மற்றும் கார் மலை போன்ற வனப்பகுதிகளில்  மரம் வெட்டுவதைத் தடுக்குமாறு கோரியும் , வெப்பவெட்டுவான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
சட்ட விரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக மணல் அகழப்படுவதால், ஆற்றின் ஆழம் அதிகரித்து, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் நிலம் மற்றும் குடியிருப்புகள் வௌ்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அகழப்படும் மண்ணை, கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்வதால் வீதிகளும் சேதமடைவதுடன், வீதியில் செல்லும் கால்நடைகளும் விபத்துக்குளாகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல்அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் போது, வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள், எங்களது வளத்தை வைத்துக் கோடிஷ்வரர்களாக வாழுகின்றனர். மலசல கூடம் கட்டுவதற்கும் எமது மக்கள், அரசாங்கத்தை நாட வேண்டியுள்ளது.
“கடந்த முறை மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி, ஆர்ப்பாட்டம் செய்து, பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம், எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தோம். எனினும், மணல் அகழ்வை நிறுத்துவது தொடர்பாக நான் மாத்திரம் முடிவெடுக்க முடியாது. மாவட்ட செயலாளரிடமும் மனு கையளிக்குமாறு கூறினார்.
“அதனடிப்படையில், மாவட்ட செயலாளரிடமும் மனுவைக் கையளித்தோம். இது தொடர்பாக சரியான தீர்வு கிடைக்குமென, மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் எங்களிடம் உறுதியளித்தார். ஆனால், தற்போது மணல் ஏற்றுவதற்கான அனுமதி புவிசரீதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
Previous Post Next Post