வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இராணுவ அலுவலர்களை நியமிக்குமாறு தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று முற்பகல் (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்குறித்த ஆலோசனையை வழங்கினார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உலருணவு வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான முன்மொழிவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உயர்தரமான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மேற்பார்வை குழுக்களை நியமித்து அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக மாற்றுக் காணிகளை இனங்காணுதல் மற்றும் அக் காணிகளை விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. காணிகளை இனங்காணும் செயற்பாடுகளை இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமெனவும், அது தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நாளைய தினத்துக்குள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், காணிகளை இனங்கண்ட பின்னர் அக்காணிகளை பயனாளிகளுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்த்தன, பைஷர் முஸ்தபா, மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.