(க.கிஷாந்தன்)
அட்டன் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கழிவுகள் பிரச்சினைகளை தீர்வு காணுவது தொடர்பாக இதனுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள் அட்டன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த விஜயத்தின் போது பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், கட்டிட நிர்மாண திணைக்களத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்த மேற்பார்வை நிகழ்வில் இணைந்திருந்தனர்.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கென பல இடங்களை மேற்குறிப்பிட்ட அதிகாரிகளால் பார்வையிட்ட போதிலும் ஒரேயொரு இடம் மாத்திரமே அதிகாரிகளால் இணங்காணப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அட்டன் லா எடம்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் சகல உள்ளுராட்சி நிலையங்களிலும் சேர்க்கப்படும் கழிவுகள் ஓரிடத்தில் ஒன்று திரட்டி நவீன தொழிநுட்பத்துக்கு அமைய மீள்சுழற்சிக்கு உற்படுத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.