பரீட்சை மண்டபங்களில் பரீட்சார்த்திகள் தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதை கண்டறியும் புதிய வகை கருவிகளை பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்குவது தொடர்பான அவதானத்தை பரீட்சைகள் திணைக்களம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பு இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி மாணவர்களிடம் நவீன தொழிநுட்ப கருவிகள் உள்ளனவா?என்பது குறித்து சோதனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையில் கொழும்பின் பிரதான பாடசாலை ஒன்றின் மாணவன் புளுடூத் வசதியுடன் பரீட்சை எழுதியுள்ளமை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்தே பரீட்சைகள் திணைக்களம் இது குறித்து அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணத் தர பரீட்சையில் அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.