கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டக்களப்பில் உள்ள மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனைக்கு மாற்றப்படுவதை ஆட்சேபித்து தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
இவ்வூழியர்களின் விடயங்களை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்து உள்ள பிராந்திய அலுவலங்களே நேரடியாக கையாண்டு வருகின்றன. இவ்வேற்பாடு உண்மையில் ஊழியர்களுக்கு வசதியானதாக உள்ளது. மேலும் அதிகாரம் ஒரு இடத்தில் குவிக்கப்படாமல் பன்முகப்படுத்தப்பட்டு இருப்பது வாய்ப்பானதாகவும் உள்ளது.
ஆனால் இப்பிராந்திய அலுவலகங்களிடம் இருந்து ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்து மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனைக்கு கொடுக்க கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ( நிதி ) தீர்மானித்து உள்ளார். இதை ஆட்சேபித்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், இலங்கை அரசாங்க பொது சேவைகள் ஆகியன கிழக்கு மாகாணத்தின் ஆளுனர், முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளன.
இந்நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மேற்படி விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பிரதி பிரதம செயலாளர் ( நிதி ) அழைப்பு விடுத்து உள்ளார் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மாகாண நீர்ப்பாசன பணிமனைக்கு ஊழியர்களின் நிதி சம்பந்தப்பட்ட விடயங்களை கையளிக்கின்ற தீர்மானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இப்பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவார்கள் என்றும் இத்தீர்வு எட்டப்படாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர வேறு மார்க்கம் இருக்க போவதில்லை என்றும் இவர் கூறினார்.