-எம்.வை.அமீர் -
வடகிழக்குக்கு வெளியே மூன்றில் இரண்டுபங்கு முஸ்லிம்கள் இருக்கின்ற நிலையிலும் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாங்கள் எல்லோரும் அவருடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தோம் என்றார் ஐக்கியதேசியாக்கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.றஸ்ஸாக்.
கல்முனை பிரதேசத்தில் ஐக்கியதேசியாக்கட்சியை புணரமைப்பது தொடர்பான மக்கள் சந்திப்பு சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் 2017-08-13 ஆம் திகதி இடம்பெற்றது இங்கு உரையாற்றும்போதே சட்டாத்தரணி றஸ்ஸாக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் எங்களுக்கு அப்போது அவ்வாறுதான் இன உணர்வு ஊட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு உரிமைகள் வேண்டும்,தனி அலகு வேண்டும், கரையோர மாவட்டம் வேண்டும் என்றல்லாம் எங்களது மனங்களில் இன உணர்வு ஊட்டப்பட்டு அதில் நாங்கள் இணைக்கப்பட்டோம். காலம் செல்லச் செல்லத்தான் இவைகள் எல்லாமே பொய் என்று புரிந்து கொண்டதாகவும் இன ரீதியிலான கட்சியின் வருகை, வடகிழக்குக்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம்களைப் பாதிக்கும் என்ற விடயத்தை, அந்த நேரத்தில் வடகிழக்குக்கு வெளியே இருந்த முஸ்லிம் தலைவர்கள், அஷ்ரப் அவர்களிடம் கூறியிருந்ததாகவும் அதன் பதிப்புக்களையே தற்போது அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
காலப்போக்கில் அஷ்ரப் அவர்கள் இந்த விடயங்களை உணர்ந்துகொண்டதாகவும் அதன்பின்னர் நூஆ என்ற தேசியக் கட்சியை ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டார். பொதுபலசேன ராவண பலய என்ற அமைப்புக்கள எல்லாம் முஸ்லிம் காங்கிரஸின் வருகையின் பின்னரே உருவானதாகவும் இன ரீதியிலான கட்சிகளைக் கொண்டுள்ளவர்கள் தொடராக அமைச்சர்களாக வலம்வரலாம் என்றிருந்தால் ஏன் தங்களால் வரமுடியாது என பெரும்பான்மை இனத்தவர் யோசிப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில் முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தேசியக் கட்சியான ஐக்கியதேசியாக்கட்சியுடன் இணைந்து அதனை பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் தெரிவித்தார்.
பதியுதீன் முகம்மத் அவர்கள் தேசியக்கட்சி ஸ்ரீமாவுடன் நெருக்கமாக இருந்ததன் காரணமாகத்தான் முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் முன்னேறிய சமூகமாக இருப்பதாகவும் அவர் அறிமுகப்படுத்திய தரப்படுத்துதல் முறையின் காரணமாக அதிகமான கல்வியாளர்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்முனையின் அபிவிருத்தி பற்றிக்கூறுவதாயின் ஐக்கிய தேசியக்கட்சியில் மிக நெருக்கமாக இருந்து பணியாற்றிய மறைந்த மகான் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களால் மேற்கொள்ளபட்ட அபிவிருத்திகளே இன்றும் பேசக்கூடியதாக உள்ளதாகவும் அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் உள்ள நிறுவனங்களே இன்னும் எஞ்சி இருப்பதாகவும் ஏனையவை வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
கல்முனை உரிய காலத்துக்கான தனது அபிவிருத்தியை எட்டாததன் காரணமாகவே ஏனைய ஊர்களால் குறைத்துப் பேசப்படுவதாகவும் இதற்கான அனைத்து பொறுப்புக்களையும் இப்போது கல்முனையை நிர்வாகிப்போர் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒருகாலத்தில் கல்முனை இப்பிராந்தியத்தில் எவ்வாறு முன்னிலை வகித்ததோ அவ்வாறு எதிர்கால கல்முனையை கட்டியெழுப்ப மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மன்சூர் அஷ்ரப் என அமைச்சரவை அமைச்சர்கள் அரசோட்சிய கல்முனையின் கனவை ஹக்கீமும் றிஷாட்டும் அனுபவிக்கிறார்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டியதை யாரோ எடுத்துக்கொண்டு எங்களவர்களுக்கு எலும்புத்துண்டுகளை போடுவதுபோல் எதையோ கொடுத்துவிட்டு வேறு அமைச்சர்களை கொண்டுவந்து எதையாவது இவர்கள் செய்துவிடாமல் தடையும் போடுகிறார்கள். இவ்வாறான நிலை எங்களுக்கு இல்லை மறைந்த மன்சூர் அவர்கள் செய்ததைப்போல் நாங்களும் செய்யலாம் அமைச்சர்களை கூட்டிவந்து எங்களுக்கான அபிவிருத்திகளை நாங்களே செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
றவூப் ஹக்கீமோ அல்லது றிஷாட் பதியூதினோ அமைச்சர்களாக இருக்கும் வரைக்கும் கல்முனை தனது எத்ர்பார்ப்புக்களை அடையப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஐக்கியதேசியாக்கட்சியை நாடளாவிய ரீதியில் புணரமைக்கும் திட்டத்தின்கீழ் அண்மையில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது என்றும் அந்தக்கூட்டத்தில் இலங்கையில் இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின்
சகல அமைப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் என்றும் அதில் எதிர்காலத்தில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் பிரதேச ரீதியில் கட்சிக் கிளைகளை புணரமைத்து அதனூடாக அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டத்தாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு ஐக்கியதேசியாக்கட்சியின் அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கல்முனைத் தொகுதியில் பல்வேறு பிரதேசங்களிலும் புணரமைப்புப் பணிகள் தொடர்பாக கருத்துப்பரிமாறல்களை செய்துகொண்டிருப்பதாகவும் இதன் ஒருகட்டமாகவே சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கான கட்சி புணரமைப்பு தொடர்பான சந்திப்புக்கு இங்குள்ளவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில் மிகுந்த பின்னிலையில் இருக்கின்ற இப்பிரதேச தொண்டர்கள், கட்சியைப் பலப்படுத்துவதனூடாக எங்களது எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்ள முடியும் என்றும் அதற்காக ஐக்கியதேசியாக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் காலங்களில் எந்த அடிப்படையில் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன என்ற தகவல்களும் பிரதேச அமைப்பாளர்களின் ஊடாக அந்ததந்த பிரதேசங்கள் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாகவும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைப்பாளர்களை தனியாகவும் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பில் ஐக்கியதேசியாக்கட்சியின் அமைச்சர்கள் கட்சியின் அமைப்பாளர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் எல்லா அமைச்சர்களும் அந்ததந்த பிரதேச அமைப்பாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராய் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் அமைப்பாளராக தெரிவானதன் பின்னர் இரண்டு கோடி ரூபாய்களைத் தர இணங்கியுள்ளதாகவும் இதை ஐந்தாயிரம் தொடக்கம் பதினைந்து ஆயிரம் வரையான திட்டங்களை தருமாறும் கோரியுள்ளதாகவும் இன்னும் இரண்டொரு மாதங்களில் தொழில் வாய்ப்புக்களையும் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்கட்டமாக அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தபோது தான் அவரிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் கல்முனைக்கு வீட்டுத்திட்டம் ஒன்றைக் கோரியதாகவும் இடம் அடையாளப்படுத்தப்படுமானால் அதனை செய்துதருவதாக வாக்குறுதியளித்ததாகவும் முதற்கட்டமாக 200 பேருக்கு 200000.00 ரூபாய்கள் வீதம் குறைவீடுகளை முடித்துக்கொள்ள கடன் அடிப்படையில் உடன் வழங்க முடியும் என்றும் இடைநிறுத்தப்பட்டுள்ள சீமெந்து பக்கட் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
ஏனைய அமைச்சர்களுடனான சந்திப்புக்களை எதிர்காலத்தில் செய்து கல்முனை மக்களின் எத்ர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ளதாகவும் அதற்காக அவர்களை இந்த பிரதேசத்துக்கு அழைத்துவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் கபீர் ஹாஸிமுடைய இணைப்புச்செயலாளரும் மாவன்னல முஸ்லிம் சம்மேளன தலைவருமான தேசபந்து ஏ.ஆர்.எம்.றிஸ்வி சுபைர் மற்றும் முஸ்லிம் சமய அமைச்சரின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டு காத்திரமான கருத்துக்களை வெளியிட்டனர். அதேவேளை நிலஅளவையாளர் மீராசாஹிப் அப்துல் றபீக் உள்ளிட்ட பிரமுகர்களும்பிரசன்னமாகியிருந்தனர்.