காத்தான்குடியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் நிகழ்வை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொள்வதனையே, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு புறக்கணித்துள்ளார்.
தனது முழுமையான நிதி ஒதுக்கீட்டிலும் – பங்களிப்புடனும் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிடத்தை கிழக்கு முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் இணைத்து அவர்களது அரசியல் இலாபங்களுக்காக என்னை புறக்கணித்து விட்டு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
கலைக்கப்பட்டுள்ள காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை தாம் மீண்டும் கைப்பற்றவுள்ளதாகவும், பின்னர் அதற்காக நாட்டப்பட்டுள்ள நினைவுக் கல்வெட்டு கழற்றி எறியப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.