கொழும்பில் உள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கறுவாத்தோட்ட பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
அகில இலங்கை மோட்டார்சைக்கிள் சாரதிகள் சங்கமே, மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தது.
‘இளைஞர்களின் இரும்புக் கனவை தகர்க்காதே’ என்ற தொனிப்பொருளில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்ததாக, எழுத்துமூலமாக அறிவித்திருந்த அந்த சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்ஹ, அதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.
இந்நிலையில், கறுவாத்தோட்ட பொலிஸாரினால், அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே, ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு முன்பாக, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கமுடியாது என்று, குறிப்பிடப்பட்டுள்ளது
காலி முகத்திடலில் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பேரணியை ஆரம்பித்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அந்தச் சங்கம் தீர்மானித்திருந்தது.
ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இடமளிக்கமுடியாது என்றும் கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில், அகில இலங்கை மோட்டார்சைக்கிள் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்ஹ, தெரிவிக்கையில், “திட்டமிட்டதன் பிரகாரம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று, காலி முகத்திடலில் காலை 9:30க்கு பேரணி ஆரம்பமாகும். எனினும், பேரணி நிறைவடையும் இடத்தை, தற்போதைக்குக் குறிப்பிடமாட்டோம்” என்றார்.