காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காத நிலையில், புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, வாழைச்சேனை, தெஹியத்த கண்டி உள்ளிட்ட 6 வைத்தியசாலைகளை ‘1 ஏ’ தர வைத்தியசாலையாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், ‘1 ஏ’ தர வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்குத் தேவையான சகல தகுதிகளும் - வசதிகளும் உள்ள காத்தான்குடி தள வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சுகாதார அமைச்சரை ராஜித சேனாரத்னவை நேரில் சந்தித்து காத்தான்குடி தள வைத்தியசாலை திட்டமிட்டு தரமுயர்த்தப்படாமை குறித்து முறையிட்டார்.
அத்துடன், காத்தான்குடி தள வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்து ‘1 ஏ’ தர வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் அஸ்பர் ஜே.பி. ஆகியோர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, காத்தான்குடி தள வைத்தியசாலை தரமுயர்த்துவதற்கான காரணங்கள் - அதற்கான தேவைப்பாடுகள் என்ன என்பது குறித்து இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்தார்.
பின்னர், இந்த விடயம் தொடர்பான தாம் கவனம் செலுத்தி மேலதிக அறிக்கைகள் - தகவல்களைப் பெற்று காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்த சகல நடவடிக்கைகளையும் அவசரமாக மேற்கொள்வதாக இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளித்தார்.