இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் தமது கலாசார சீருடையில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் சில பரீட்சை நிலையங்களில் தமது கலாசார உடையான பர்தாவுடன் பரீட்சை எழுதுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்த எதிர்பாராத நடவடிக்கை காரணமாக அவர்கள் உளவியல் ரீதியாக அசெளகரியங்களை சந்தித்தனர். இதனால், குறித்த பரீட்சைகளில் தமது பிள்ளைகள் குறைவான புள்ளிகளையே பெற்றதாக அவர்களது பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
அந்த வகையில் இம்முறையும் முஸ்லிம் மாணவிகளுக்கு இவ்வாறான அசெளகரியங்கள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.