இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு நாளை மறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) புனித மக்கா நகர் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமானத்திலேயே முதலாவது யாத்திரிகர்கள் குழு பயணமாகவுள்ளது. இக்குழுவில் 148 யாத்திரிகர்கள் பயணிக்கவுள்ளனர்.
முஸ்லிம் சமய விவகாரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர், ஹஜ்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைக்கவுள்ளனர்.
சவூதி நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஜித்தா விமான நிலையத்தை அடையும் இலங்கை யாத்திரிகர்களை சவூதி அரேபியாவூக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம், பதில் கவுன்ஸிலர் ஜெனரல் எஸ்.எல்.கே. நியாஸ், மொழிபெயர்ப்பு அதிகாரி நளீர் உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர்.
அதேவேளை, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்வரும் 26 ஆம் திகதி சவுதிக்கு செல்லவுள்ளார். அத்துடன் இம்முறை ஹஜ் குழுவில் ஐந்து வைத்தியர்கள் அடங்குகின்றனர். இம்முறை ஹஜ் கடமைக்கு இலங்கைக்கு 2840 கோட்டா கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.