(க.கிஷாந்தன்)
அக்கரப்பத்தனை கிளாஸ்கோ தோட்ட பிரிவான நெதஸ்டல் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டத்தில் 14.08.2017 இன்று காலை 9 மணியளவில் ஈடுப்பட்டனர்.
தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 125 தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்னால் நடத்தினர்.
இந்த தோட்டத்தின் தொழிலாளர்களின் வருமானத்தை பாதிக்கும் வகையில் நல்ல விளைச்சலை தரக்கூடிய தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலையை மூடியிருப்பதாகவும், தோட்டத்தில் முறையான சுகாதாரத்தை பேணும் வகையில் வைத்தியர் ஒருவர் இல்லாததை சுட்டிக்காட்டியும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கோரி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தையும், முழு நாள் பணிபகிஷ்கரிப்பையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
எனவே உடனடியாக எமது கோரிக்கைகளை தோட்ட நிர்வாகம் தீர்த்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தினை நடத்தியமை குறிப்பிடதக்கது.