ராஜபக்ஷ ஆட்சியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கு ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையுமென அமைச்சர் தயாகமகே தெரிவித்தார்.
ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு லேக்ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து தினமின பத்திரிகையுடன் வழங்கும் ‘பிஹிதொர’ இணைப்பிதழை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று(15) லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்:
தேயிலை, இறப்பர் தெங்கு ஏற்றுமதியில் பெறப்படும் வருமானம், எதிர்காலத்தில் தேயிலை கறுவா, தெங்கு, இறப்பர் ஏற்றுமதியூடாக பெறப்படும். அரசாங்கத்தின் ஊடாக மக்கள் பல்வேறு விடயங்களை எதிர்பார்க்கின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கையில் நாம் பத்து இலட்சம் தொழில்வாய்ப்பு குறித்து பேசினோம். மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த தொழில் திட்டங்கள் காரணமாக நாடு பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது.
இந்த செலவு தாங்க முடியாதளவு அதிகமானது. ராஜபக்ஷ ஆட்சியில் பெற்ற கடனை செலுத்த, ஏற்றுமதி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.
பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் அபிவிருத்திகள் பற்றி மக்களுக்கு அறிவூட்டக்கூடிய பத்திரிகைகள் குறைவாகவே உள்ளன. பத்திரிகை நிறுவனங்கள் குப்பையை விற்றாவது இலாபம் ஈட்டவே முயல்கின்றன. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். ‘தினமின’ பத்திரிகையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக மக்களை அறிவூட்ட முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.