ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
எனது வேலை தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ காணி பிடித்து கொடுப்பதோ அல்லது இடம் சம்பந்தமான பிரச்சனைகளில் தலையிடுவதோ கிடையாது. மாறாக சிறார்கள் கல்வி கற்கின்ற பாடசாலை மைதானத்தினை விரிவு படுத்தி கொடுக்கும் மானசீக ரீதியான பணியினையே செய்து வருகின்றேன்.
என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான பிரச்சனை சம்பந்தமாக கேள்வி எழுப்பிய பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை நிருவாக எல்லைகளுக்கு உட்பட்ட 207 ஏ மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவின் பதுரியா நகர் எனும் தமிழ், முஸ்லிம் எல்லை கிராமத்தில் எல்லையில் அமைந்துள்ள மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானத்தினை விரிவு படுத்த கோரி மட்டக்களப்பு மங்களராமய அம்பிட்டிய சுமனரத்தன தேரரின் தலைமையில் குறித்த பிரதேசத்தில் அருகாமையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நேற்று 15.08.2017 காலை தொடக்கம் பிற்பகல் இரண்டு மணி வரை இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டமும் விடயமும் நேற்று கல்குடா பிரதேசத்தில் முக்கிய பேசும் பொருளாக மட்டுமல்லாது தேசியத்திலேயே முக்கிய செய்தியாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரருடைய குறித்த விடயம் சம்பந்தமான தலையீடுகள் பிரதேசத்தில் இனமுறுகலினை தோற்றுவிக்க கூடியது என பலவாறாக பலராலும் பேசப்பட்டு வருகின்ற விடயமாக மாறியுள்ளது.
ஆகவே குறித்த விடயம் சம்பந்தமாக அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் நிலைப்பாடு என்ன.? ஏன் இவ்வாறு அவர் நடந்து கொள்கின்றார்.? இதற்கு பின்னால் ஏதும் பின்னணிகள் இருக்கின்றனவா.? எதனை எதிர்பார்த்து இவ்வாறு தேரர் நடந்து கொள்கின்றார் போன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தும் முகமாக சமூக ஆர்வலரும் நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியுமான சாட்டோ வை.எல்.மன்சூர், பிரதேசத்தின் முக்கிய புள்ளியான கபீர் ஹாஜியார், பிரதேச வாசி முபாறக் ஆகியோர்கள் சுமனரத்ன தேரரின் மட்டக்களப்பு மங்கள ராமயவிற்கு நேரடியாக சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடல்களுக்கு பிற்பாடு ஊடகங்களுக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வழங்கிய கருத்துக்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.