ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸிடம் கிழக்கின் முதலமைச்சுப் பதவி இருப்பதை பொறுக்கமுடியாமல் சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர் என முஸ்லீம் காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளர் அன்வர் நௌஷாத் கல்குடாத் தொகுதியின் அபிவிருத்தி தொடர்பிலான ஒன்று கூடலின் போது தெரிவித்தார்.
கல்குடாத் தொகுதி முஸ்லீம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஏ.எல்.எம் லியாப்தீன் தலைமையில் வாழைச்சேனையில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், முஸ்லீம் காங்கிரஸ் அபிவிருத்திப் பாதையில் கடந்து வந்த இடைவெளிகளை இன்று, கிழக்கின் முதலமைச்சர் இன , மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தூர நோக்கோடு நிறைவேற்றி வருகின்றார். அத்துடன் கிழக்கின் பல பிரதேசங்களிலும் முதலமைச்சினூடாக செயல்பட்டு வருகின்றமையை, வங்குரோத்து அரசியல்வாதிகளாலும், காழ்ப்புணர்வுள்ளவர்களினாலும் தாங்கவியலாதுள்ளது. அதனாலேயே தங்களின் அரசியல் கதிரைகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் இவ்வாறு கங்கணங் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.
திருமலை,மட்டக்களப்பு, அம்பாறை என மூன்று மாவட்டங்களிலும் சம அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கே தமிழ் முஸ்லீம் சிங்கள பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகளின் பிரச்சனைகள் குறித்து பெரிதும் அக்கறையுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருகின்றார்.
சுற்றுலாப்பயணத்துறை, முதலீடுகள் குறித்து பெரிதும் தற்போது கவனமெடுக்கப்படுகிறது. முதலமைச்சின் உச்ச அதிகாரங்கள் தற்போது இச்செயன்முறைக்காக பயன்படுத்தப் படுகின்றன. முதலமைச்சரின் செயல்பாடுகள் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. எதிர்கால இலக்குகளை அடையும் பொருட்டு கிழக்கு மாகாண சபை சிறப்பாக திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்திலும் இப்போதுள்ள முதலமைச்சரே முதலமைச்சராக செயற்படவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. மக்களின் நன்மைக்காக நாமும் கைகோர்த்து செயல்பட எண்ணியுள்ளோம். எனவும் கூறினார்.