அக்கரைப்பற்று வலயத்திலுள்ள 11 பாடசாலைகளின் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு தேவையான நுணுக்குக்காட்டிகளை கொள்வனவு செய்வதற்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அக்கரைப்பற்று வலய பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமாகவுள்ள நுணுக்குக்காட்டிகளை கொள்வனவு செய்துதருமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கமைவாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அக்கரைப்பற்று வலயத்திலுள்ள 11 பாடசாலைகளின் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு தேவையான நுணுக்குக்காட்டிகளை கொள்வனவு செய்வதற்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கியுள்ளார்.
அக்கரைப்பற்று கோட்டத்தில் மத்திய கல்லூரி, ஆயிஷா முஸ்லிம் பெண்கள் கல்லூரி, அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம், அல் பாயிஸா மகா வித்தியாலயமும் பொத்துவில் கோட்டத்தில் மத்திய கல்லூரி, அல் இர்பான் பெண்கள் கல்லூரி, அல் கலாம் மகா வித்தியாலயமும், அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் மத்திய கல்லூரி, அல் முனீறா பெண்கள் உயர் கல்லூரி, அல் ஹம்றா மகா வித்தியாலயம், மின்ஹாஜ் மகா வித்தியாலயம் ஆகிய 11 பாடசாலைகளுக்கு இந்த நுணுக்குக்காடடிகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக இவ்வகை நுணுக்குகாட்டிகள் இன்றி இயங்கி வந்த இப்பாடசாலைகளின் விஞ்ஞானதுறைக்கு இவ்வசதி கிடைத்துள்ளமை குறித்து பாடசாலை சமூகம், கல்வி அதிகாரிகள் கிழக்கு மாகாண எதிர்;க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய கல்விக் கோட்டத்திலுள்ள பாலர்பாடசாலை ஆசிரிகைகளுக்கான சீருடையினை கொள்வனவு செய்வதற்காகவும் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.