வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமிடத்து புதிய வெளிவிவகார அமைச்சராக தற்போதைய இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி.யுமான திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
வெளிவிவகார அமைச்சுப் பதவியானது நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி வசமே இருக்கிறது. எனவே வெளிவிவகார அமைச்சராக இராஜாங்க அமைச்சர் திலக் மாரப்பனவே நியமிக்கப்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும் எனினும் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் திலக் மாரப்பனவே வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சுப் பதவி சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படுமாயின் அந்தப் பதவியில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவை அமர்த்துவதற்கு ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியபோது வெளிவிவகார அமைச்சர் பதவி ஐ.தே.க.விடமே இருக்கவேண்டும் என இரண்டு கட்சிகளுக்குமிடையில் புரிந்துணர்வு காணப்படுகின்றது. அதனடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரே புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது.இதுவரை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்யவில்லை.
எனினும் தற்போது பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷவின் பெயரும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு பரிசீலனையில் உள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவையே மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசாங்க மட்டத்தில் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.