(எம்.ஜே.எம்.சஜீத்)
அம்பாரை மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு கேர்ளா கஞ்சா, ஹேரோயின் போன்ற போதைப் பொருட்கள் முஸ்லிம் பிரதேசங்களில் மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாடுகளினால் அக்கரைப்பற்று, சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துரை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகக் கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போதைப் பொருட்களை மொத்தமாக அம்பாறை மாவட்டத்தில் விநியோகிப்பவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் எதிர்கால சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும் என அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், கே.கோடிடீஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் தலைமையில் அம்பாரை கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்போது அமைச்சர் தயாகமகே இலங்கையில் எல்லோரும் கேர்லா கஞ்சா பாவிக்கலாம் அதற்கு நமது நாட்டில் எவ்விதமான தடைகளும் இல்லை எனத் தெரிவித்தார். இது தவறான விடயமாகும்.
அமைச்சர் தயா கமகே விரும்பினால் அவர் கேர்லா கஞ்சா பாவிக்கட்டும் ஆனால் எமது முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இப்போதைப் பொருள் பாவனை பரவி எங்களின் எதிர்கால சமூகத்தினை சீரழிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் கேர்லா கஞ்சாவினையும், ஹேராயினையும் யார் மொத்தமாக விநியோகம் செய்கின்றனர் என்ற விடயங்கள் தொடர்பாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்போதைப் பொருள் விநியோகங்களை நிறுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போதைப் பொருட்களை மொத்தமாக கடத்தி அம்பாரை மாவட்டத்தில் விநியோகிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது சட்டத்திற்கு முன் நிறுத்துங்கள். இல்லையெனில் அம்பாரை மாவட்டத்தில் எதிர்கால சந்ததியினர் சீரழியும் நிலைமைகள் ஏற்படும்.
பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் மதத் தலைவர்கள் , கல்வி அதிகாரிகள், அதிபர்கள், சமூக நலன் பொது இயக்கங்கள் இணைந்து மதத்தளங்கள் ஊடாக இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினையை மாணவ பிரதிநிதிகள், தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்தினருடன் சிநேகபுர்வமான முறையில் அனுகி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அல்லது உயர்கல்வி அமைச்சருக்கு தொடர்புகளை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூவினத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி கற்று வரும் நல்ல சூழ்நிலையில் உயர் கல்வி ஊடாக நமது நாட்டில் இன ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. மாறாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளின் போது இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை நிறுத்த வேண்டும்.
மாணவர்கள் தரப்பில் நியாயங்கள் இருந்தால் அது தொடர்பான உங்களின் கோரிக்கை மாத்திரம் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு நாங்கள் வரமுடியாது. தென்கிழக்குப் பல்லைக்கழக நிருவாகத்தினரின் நியாயங்களையும் உள்வாங்கி இப்பிரச்சினைக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.