மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல, எல்வல பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 32 ஏக்கர் பரப்பளவிலான தோட்டமொன்றில் பலாத்காரமாக பெரும்பான்மை சமூகத்தினர் உட்பிரவேசித்து காணியினை துண்டாடி பங்கிட்டு குடிசைகள் அமைத்துக் கொண்டுள்ளனர்.
32 ஏக்கர் 30 பேர்ச்சுகளைக் கொண்ட இறப்பர் தோட்டம் அக்குறனையைச் சேர்ந்த எம்.ஏ.எம். ரிஸ்வான் உட்பட அவரது உறவினர்களுக்கு சொந்தமானதாகவும் ஆரம்பத்தில் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தோட்டத்துக்குள் அத்துமீறி பலாத்காரமாக உட்பிரவேசித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் காணியை உரிமை கொண்டாடினார்கள். பின்பு இக்காணி அரசாங்கத்துக்குச் சொந்தமானது என செய்திகளைப் பரப்பியதையடுத்து தற்போது சுமார் 70 பேர் வரையில் காணியை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள் என தோட்டத்தின் உரிமையாளர் ரிஸ்வான் தெரிவித்தார்.
காணியை துண்டாடி வேலியமைத்து சில சிறிய குடிசைகளையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். இத்தோட்டத்தில் உரிமையாளருக்கு சொந்தமான எவ்வித கட்டிடங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோட்டத்தை ஒரு பகுதிநேர காவலாளியே கண்காணித்து வந்துள்ளார். பெரும்பான்மை இனத்தவர்கள் காவலாளி தோட்டத்துக்குள் பிரவேசிப்பதையும் தடை செய்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய பிரவேசத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்தளை பொலிஸில் முறையிட்ட போதும் உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என உரிமையாளர் தெரிவிக்கிறார்.
உரிமையாளரால் மாத்தளை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஒருவர் 50 ஏக்கருக்கு அதிகமாக காணிகளை சொந்தமாக வைத்திருக்க முடியாது என்ற சட்டத்தின் கீழ் LRC யினால் சுவீகரிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதியான இந்தத் தோட்டம் 1992 ஆம் ஆண்டு உரிமையாளருக்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இறப்பர் தோட்டமான இந்தக் காணியின் உறுதிகள் உரிமையாளரிடம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.