நாடு முகம் கொடுத்துள்ள இந்த கடன் சுமையை நாளைய சமூகத்திற்கு விட்டு வைக்கக் கூடாது. கடன் தொல்லைகள் இல்லாத சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்குவதே எமது இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மொறட்டுவையில் தெரிவித்தார்.
மொறட்டுவை, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்லூரி அதிபர் குசல பெர்னாந்து தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க,
நமது நாட்டை இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீட்டு சுபீட்சமான நாடொன்றை உருவாக்கவே நாம் கட்சி ரீதியில் பிளவுபடாமல் ஒன்றிணைந்துள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இதை கண்டு எதிர் அணியினர் கூச்சல் இடுகின்றனர். யார் எதை சொன்னாலும் இந்த அரசு 2020ஆம் ஆண்டு வரை செயல் பட்டு அதன் இலக்கை அடைந்தே தீரும்.
நாங்கள் ஒரு புது யுகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம். உலகம் முன்னேற்றம் அடைவதை போல் நமது நாடும் முன்னேற்றம் காண வேண்டும். தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும். மாணவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப அறிவை புகட்ட வேண்டும்.
இதற்காக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இப்போது கடன் தொல்லையை நீக்கிய பின் நாடு முன்னேற்றம் காண்பதற்காக புதிய தொழில் துறைகளை உருவாக்க வேண்டும். உங்களை அண்மித்த ஹொரண, இங்கிரியவில் 2000 ஏக்கர் காணியில் தொழில் பேட்டை ஒன்றை அமைக்க உள்ளோம். இதுபோன்ற மற்றுமொரு திட்டம் பிங்கிரியவில் உருவாக்க உள்ளோம். இதுபோன்று ஹம்பாந்தோட்டை நகரில் 10,000 ஏக்கர் காணியில் தொழிற்சாலைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இன்று பாருங்கள் உல்லாசத்துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
2 மில்லியன் உல்லாச பிரயாணிகள் நமது நாட்டுக்கு வந்துள்ளார்கள். இதை 5 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் மட்டுமல்ல ஜப்பான், ஜெர்மன், கொரியா போன்ற நாடுகளின் மொழிகள் பேச பயிற்சி அளித்து அதன் மூலம் தொழில் வாய்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
நல்ல தொரு எதிர் காலத்தை நோக்கி பயணிக்கும் போது அதிகமான விமானங்கள் நமது விமான நிலையத்திற்கு வந்து போகும். அதே போன்று கப்பல்கள் துறைமுகத்தை நோக்கி வரும் இதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கும். வீடமைப்புத்திட்டம் வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முன்னேற்றம் அடையும் போது உங்கள் பாடசாலைகளில், வீடுகளில், தொழில்துறைகளில் தொழில்நுட்பம் வளரும். நாடு வளர்ச்சி காணும் போது நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்பலாம். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க எல்லாரும் ஆசைபடுகிறார்கள். இதற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிசார் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள்.இளைஞர், யுவதிகளுக்கு நல்லதொரு எதிர் காலத்தை ஏற்படுத்தி நவீன இலங்கையில் ஆடம்பரமாக வாழக்கூடிய நல்லதொரு பொருளாதார நிலையை உருவாக்கி எதிர் கால சந்ததியினருக்கு கையளிப்போம் என்றும் கூறினார்.