இந்நாட்டில் பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச பொலிஸ் மற்றும் ஸ்ரீ லங்கா பொலிஸ் இணைந்து ஏற்பாடு செய்த தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பிலான சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மேலும் அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், 1977ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பாரியதொரு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் ஆனால் அவ்வாறான ஒரு முன்னேற்றம் பொலிஸ் பிரிவில் காணமுடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கை பொலிசுக்கு சொந்தமான சகல பிரிவுகளும் சர்வதேச செயற்பாடுகளோடும் உலக நிலைப்பாடுகளோடும் ஒற்றுப்போகக்கூடிய விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக தெற்காசிய நாடுகளும் பயனடையும் என மேலும் தெரிவித்தார்.