இன்றுடன் நிறைவடையும் உலக மெய்வல்லுநர் போட்டியில் உலகின் அதிவேக மனிதனான ஜமைக்காவின் உசெய்ன் போல்ட் சர்வதேச தடகள அரங்கில் தனது கடைசிப் போட்டியில் பங்கேற்றார். ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியே அவர் பங்குபற்றிய கடைசிப் போட்டி நிகழ்வாகும். இப்போட்டி இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு 2.20 மணிக்கு இடம்பெற்றது. போல்டின் பிரியாவிடைப் போட்டியைக்கான பெருமளவான ரசிகர்கள் வந்திருந்தனர் இதேவேளை பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி நேற்று நள்ளிரவு 2 மணிக்கு இடம்பெறவிருந்தது. இப்பத்திரிகை அச்சுக்கு செல்கையில் இப்போட்டிகள் ஆரம்பமாயிருக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுவரும் உலக மெய்வல்லுநர் போட்டி இம்முறை பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆம் திகதியன்று ஆரம்பமான 16 ஆவது உலக மெய்வல்லுநர் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. நேற்றைய 9 ஆம் நாள் ஆரம்பத்தின் போது பதக்கப் பட்டியலில் ஐக்கிய அமெரிக்கா 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது.
ஆபிரிக்க நாடான கென்யா மூன்று தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் அடங்கலாக 8 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஐரோப்பிய நாடான போலந்து இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றன.
போட்டி ஏற்பாடு நாடான மகா பிரித்தானியா ஒரேயொரு தங்கப்பதக்கத்தை வென்று 13 ஆவது இடத்தை மேலும் 6 நாடுகளுடன் பகிந்துகொண்டுள்ளது. இந்த பதக்கத்தை வென்று கொடுத்தவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி சம்பியனான மோ பரா ஆவார். இவர் உலக மெய்வல்லுநர் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இப்போட்டிப் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது சிறப்பம்சமாகும்.
வீழ்ந்தார் போல்ட்
தனது கடைசி தனிநபர் போட்டியில் பங்கேற்ற போல்ட் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9.95 செக்கன்களில் ஓடிமுடித்து 3 ஆவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார். இப்போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜஸ்டின் கெட்லின் (9.92) மற்றும் கிறிஸ்டியன் கோல்மன் (9.94) ஆகியோரிடம் உலகின் அதிவேக மனிதனான போல்ட் வீழ்ந்தார்.
நான்கு பேரும் தோல்வி
இலங்கை சார்பாக பங்குகொண்ட நால்வரும் தோல்வியைத் தழுவினர். இதில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அநுராத இந்திரஜித் குரே தோல்வியைத் தழுவினார். மேலும், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேசிங்க காயம் காரணமாக போட்டியின் இடைநடுவில் விலகினார்.
இதேவேளை கடந்த 10 ஆம் திகதியன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் கட்ட சுற்றுப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் நிமாலி லியனாராச்சி போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 08:49 விநாடிகளில் முடித்தார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற வருண லக்சான் மூன்று முயற்சிகளில் இரண்டு முயற்சிகளில் உரிய முறையில் வீசவில்லை. உரிய முறையில் ஒரு முறை வீசிய அவர், 73.16 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். எனினும் அவரால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
அடுத்தது கட்டார்
கடைசிப் போட்டி நிகழ்வாக இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு (14) 1.25 மணிக்கு பெண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியும் 01.45 மணிக்கு 4 x 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியும் இடம்பெறவுள்ளன. அத்துடன் அடுத்த உலக ெமய்வல்லுநர் போட்டி கட்டாரின் தோஹாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.