Top News

மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாருக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் தர்க்கம் : மன்னாரில் சம்பவம்


ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணியின் மன்னார் மாவட்ட அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் அடம்பன் ஆக்காட்டி வெளி பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறந்து வைப்பதற்கு முன், அப்பகுதியிலுள்ள அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்ததை துப்புரவு செய்யும்பணி இடம்பெற்றபோது பொலிஸாருக்கும், ஜனநாயகப் போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் போரட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த போரளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வடமாகாண ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமையில் மன்னார் ஆட்காட்டி வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்ததை துப்புரவு செய்யும் பணியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனர்.
இதன்போது திடீரென அங்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால்  துப்புரவு செய்யும் பணி தடுக்கப்பட்டதோடு, அனைவரையும் கலைந்து செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் முன்னாள் போராளிகள் கலைந்து செல்ல முடியாது எனவும், குறித்த துயிலும் இல்லத்தில் இறந்தவர்கள் எங்கள் இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் எனவும் எனவே, அவர்களை நினைவு கூர வேண்டியது எங்கள் கடமை எனவும் எங்கள் ஜனநாயக உரிமையை எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் மாவீரர் துயிலும் இல்லத்ததை துப்புரவு செய்யும் பணி தொடர்பாக எந்த அனுமதியும் பொறப்படவில்லை எனவும் பிராந்திய பொலிஸ் நிலையத்துக்கு எந்த தகவலும் வழங்கபடவில்லை எனவும், எனவே துப்புரவு செய்யும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் முன்னாள் போராளிகள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றம் பெற்ற நிலையில்  முறுகல் நிலையை தொடர்ந்து ஆட்காட்டிவெளி பிரதேசத்தில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனை கட்டுப்படுத்துமுகமாக முன்னாள் போராளிகளின் வேண்டுகேளுக்கு இணங்க 5 நிமிட நினைவஞ்சலி நிகழ்வை மட்டும் நடத்துவதற்கான அனுமதியை பொலிஸார் வழங்கியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து முன்னாள் போராளிகளினால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றப்பட்டு தமிழ் மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணியின் மன்னார் மாவட்ட அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் அடம்பன் ஆட்காட்டிவெளி பிரதேசத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post