வேலை வாய்ப்புகள், காணி விடயங்கள், வியாபாரங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பாரியளவில் காணிகள் பறிபோய்கொண்டிருப்பதுடன், வியாபாரத்திலும் தமிழர்கள் பின்தங்கியுள்ளார்கள் எனவும், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார்.
திருகோணமலை விசேட தேவையுடையோர் மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற கட்சியின் திருமலைக்கான முதலாவது கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“வட, கிழக்கில் சிறந்ததொரு ஆட்சியை கொண்டு வருவதே, எமது கட்சியின் நோக்கமாகும்.
“கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றோம். அவ்வாறு வாழுகின்றபோது, ஏன் தமிழனைத் தமிழன் ஆழக்கூடாது. இதில் என்ன தவறு உள்ளது. எனவே, கிழக்கு மாகாணத்தை தமிழ் மக்களே ஆழ வேண்டும்.
“இதனை வேறு சமூகத்தினர் தவறாகப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அவ்வாறு பரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவ்வாறு புரிந்துகொள்ளக்கூடாது என்ற வேண்டுகோளை நாங்கள் விடுக்கின்றோம்.
“தற்போது ஒரு முஸ்லிம்முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றார். கடந்த காலத்தில் தமிழ் மக்கள், தமிழ் முதலமைச்சரை ஆக்குகின்ற ஆணையை வாக்களிப்பு மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கினார்கள். அந்த ஆணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றவில்லை.
“அதாவது, த.தே.கூ. 11 ஆசனங்களைப் பெற்றிருந்தும் 7ஆசனங்களை எடுத்த முஸ்லிம் காங்கிரஸிடம் ஆட்சியைத் தூக்கிக்கொடுத்திருந்தார்கள்.
“அதன் விளைவு, தமிழ் மக்கள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். வேலைவாய்பிலும் சாரி, காணி விடயத்திலும் சரி, வியாபாரத்திலும் சரி நாம் பின்தங்கியிருக்கின்றோம்.
“எனவே, ஒரு தமிழ் முதலமைச்சரைக் கிழக்கில் கொண்டு வரவேண்டும் என்பது எனது எண்ணம்.
“அதற்கான அத்திபாரத்தை நாங்கள் தற்போது இட்டுள்ளோம். அதற்கான வரவேற்பு, எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. நாங்கள் நிச்சயமாக வருகின்ற தேர்தலில் போட்டியிட்டு, பாரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்றார்.