Top News

பூநகரியில் பாரிய மணல் கொள்ளை- நடவடிக்கை எடுத்த அங்கஜன் எம்.பி



பாறுக் ஷிஹான்
 
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இப் பகுதியில் தேவாலயத்திற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமான பெருமளவான மணல் காணப்படுகிறது. இந்தக்கிராமத்தின் முக்கிய வளமாக அந்த மணல் வளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்காது மன்னார் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி முறையற்ற ரீதியில் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இச் செயற்பாடு தொடர்பாக கிராம மக்களால் பொருத்தமான அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்திய போதும் தடுத்து நிறுத்துவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதியில் அம்மக்களால் குறித்த விடயம் தொடர்பாக நள்ளிரவு 11.00மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கஜன் இராமநாதன் அவ்விடத்திற்கு உடனே சென்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்தியதோடு பொலிசாருடனும் தேவாலயத்திற்கு பொறுப்பான போதகருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post