Top News

மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்; அமைச்சர் நஸீர் உறுதி


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்னர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உறுதியளித்துள்ளார்.

சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகளுடன் தனது அட்டாளைச்சேனை பணிமனையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

ஷூரா கவுன்ஸில் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் மௌலவி முஹம்மத் சலீம், ஷூரா கவுன்ஸில் பிரதித் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், செயலாளர் எம்.ஐ.எம்.சாதாத், பிரதிச் செயலாளர் எம்.சி.எம்.சி.முனீர், பிரதிப் பொருளாளர் எம்.ஐ.எம்.இஸ்திகார், முன்னாள் செயலாளர் எஸ்.எம்.கலீல் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இக்குழுவினர் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்து அமைச்சருடன் கலந்துரையாடினர். அத்துடன் குறித்த வைத்தியசாலையில் நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் பற்றியும் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அது இன்னும் நிறைவேற்றித்தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் இதனால் இவ்வைத்தியசாலை மிகவும் பின்னடைவான நிலைக்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசாங்க சுற்றறிக்கையை காரணம் காட்டி இதனை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதிலுள்ள நடைமுறைச்சிக்கல்களை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை 'பி' தரத்தில் இருந்து 'ஏ' தரத்திற்கு உயர்த்துமாறு ஷூரா கவுன்ஸில் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை கலைவதற்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார். 
Previous Post Next Post