Top News

டிரம்ப் செய்த வேலையினால் எனக்கு அசௌகரியம் ஹிலாரி

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் தினசரி வெடித்துக் கொண்டேதான் உள்ளன. இந்த நிலையில் அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹில்லாரி கிளிண்டன் வெளிப்படுத்தியுள்ளார்.
What Happened? என்ற தலைப்பில் தனது அதிபர் தேர்தல் பிரசார அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார் ஹிலாரி. இந்த புத்தகம் அடுத்த மாதம் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஓடியோ உரையை வெளியிட்டுள்ளார் ஹிலாரி. அதில் அவர் கூறியுள்ள சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயின்ட் லூயிஸ் நகரில் கடந்த அக்டோபர் மாதம் 2வது அதிபர் தேர்தலுக்கான பொது விவாதம் நடந்தது. அது ஒரு குறுகிய மேடை. நான் பேசிக் கொண்டிருந்தேன். டிரம்ப் வெகு அருகே நின்று கொண்டிருந்தார்.
எனக்குப் பின்னால் நின்றிருந்த அவர் என்னையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிய ஒரு சர்ச்சை முதல் நாள்தான் வெடித்திருந்தது. அதுதான் பெண்ணிடம் அத்துமீறியதாக வந்த புகார்.
அது வேறு ஞாபகத்திற்கு வந்து என்னை நெளிய வைத்தது. எனக்கு கழுத்தில் அவரது மூச்சுக் காற்று பட்டதால் அசூயையாக இருந்தது. நெளிந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு அது பெரும் அசௌகரியமாக இருந்தது.
அந்த மேடையில் நான் எங்கெல்லாம் போய் பேசினேனோ அவரும் என்னைப் பின் தொடர்ந்தபடியே வந்தார். நின்றார். தர்மசங்கடத்தைக் கொடுத்தார். உற்று பார்த்தபடியே இருந்தார். எனது கஷ்டத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.
ஒரு கட்டத்தில் அவரைத் திரும்பிப் பார்த்து என்ன பண்றீங்க, தள்ளிப் போங்க, தள்ளி நில்லுங்க. மற்ற பெண்களைப் போல என்னையும் டீஸ் செய்யலாம் என்று நினைக்காதீர்கள் என்று சத்தமாக கத்திச் சொல்லலாமா என்று கூட நினைத்தேன்.
இது என்னால் மறக்க முடியாத அனுபவம். எனது பிரசாரத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் நான் அவர்களை கைவிட மாட்டேன் என நம்பியிருந்தனர்.
ஆனால் அவர்களை நான் கைவிட்டு விட்டேன். அது வருத்தமாக இருக்கிறது இப்போதும் கூட என்று கூறியுள்ளார் ஹிலாரி கிளிண்டன்.
Previous Post Next Post