Top News

கல்முனையில் மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்! -அமைச்சர் தலதா அத்துக்கோரல-


-எம்.வை.அமீர்-

பல வருடங்களாக கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அலுவலக தேவைகள் காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும் குறித்த காரியாலயத்தை மிக விரைவில் மீண்டும் கல்முனைக்கே இடமாற்றித் தரவுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த, சேவைகளை மக்களின் காலடிக்குக் கொண்டுசென்று மக்களின் பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும், நடமாடும் சேவை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2017-08-27 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அமைச்சர் தலதா அத்துக்கோரல, கல்முனையில் இயங்கிய பணியகத்தின் காரியாலயத்தை மீண்டும் கல்முனையில் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ரஸ்ஸாக் ஆகியோரும் ஏனைய பாராளமன்ற உறுப்பினர்களும் பல விடுத்துவருவதாகவும், நிற்சயமாக அவசரமாக குறித்த காரியாலயத்தை திறக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

அலுவலக இடமாற்றலின்போது சிலர் அரசசொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவ்வாறானசெயற்பாடு ஆரோக்கியமான ஒன்றல்ல என்று தெரிவித்த அமைச்சர், அவர்கள் அடையாளம் காணப்படுமிடத்து வெளியே வரமுடியாதவாறு சிறையில் அடைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

நடமாடும் சேவை நிகழ்வில் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, நலன்புரிப் பிரிவு, விஷேட புலனாய்வுப்பிரிவு, சமூகவியல் பிரிவு மற்றும் மாவட்ட அபிவிருத்தி அதிகாரிகளை சந்திக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.ரஸ்ஸாக், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளும் பிரதேச செயலக உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் துறைசார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பலர் நிவாரணங்களைப் பெற்றனர்.
நிகழ்வின் இறுதியில் பிரதேச செயலாளரினால் அமைச்சருக்கு ஞாபக சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.




Previous Post Next Post