கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக்கர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவருகின்றது.
முன்னதாக ஜூலை 19ஆம் திகதி 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாகவும் அதற்காக 5மில்லியன் ரூபா நிதியை இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இருப்பினும் குறித்த திகதியன்று காணிவிடுவிப்பு நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளில் தமக்குச் சொந்தமான காணிகள் எதுவும் இல்லையெனக் கூறிய அம்மக்கள் போர்க்கொடி தூக்கியமையால் அந்நிகழ்வு கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை 26ஆம் திகதி சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான நிலையிலே கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக 166நாட்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மேலும் 111ஏக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை கேப்பாப்புலவில் உள்ள 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் இரண்டு ரூட் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச்செயலாளர், அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் நேற்று மீண்டுமொரு அவசரக் கடிதம் அனுப்பி யிருந்தமை குறிப்பிடத்தக்கது.