யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வடக்கில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், தேவைப்படின் முப்படைகளின் உதவியை சிறிலங்கா காவல்துறை கோர முடியும்.
அவ்வாறான நிலையில், காவல்துறையினருக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் உதவ சிறிலங்கா இராணுவத்தின் வான்வழி நகர்வுப் படையணி தயார் நிலையில் உள்ளது. எனினும், வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களைச் சோதனையிடவோ, கைது செய்யவோமாட்டார்கள். காவல்துறையினருக்கும், சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மாத்திரம் உதவுவர்.
அதேவேளை, அரச புலனாய்வுப் பிரிவுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு உதவிகளை வழங்கும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.