Top News

டிசம்பரில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்!


சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தள்ளிப்போடப்பட்டு வந்த இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல்களை வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்டம் வரும் ஒக்டோபர் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக கூறினார். 

இதன்படி சம்பந்தப்பட்ட தேர்தலை வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அளவில் நடத்த முடியும் என்றும், அன்றைய தினம் நடத்த முடியாவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நடத்த முடியும் என்றும் மகிந்த தேஷப்ரிய கூறினார். 

மேலும், தேர்தல் திகதி தள்ளிப்போவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்று கூறி, சம்பந்தப்பட்ட தேர்தலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைத்து வருகிறது. 

ஆனால் தேர்தலை நடத்துமாறு கடந்த காலத்தில் தீவிரமாக குரல் கொடுத்து வந்த கூட்டு எதிர் கட்சியினர், தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கம் சந்திக்கவுள்ள படுதோல்வியை தடுக்கவே அதை தள்ளிப்போட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகிறது. 

Previous Post Next Post