Top News

அனுபவமும் ஆளுமைமிக்க ஒரு அரசியல்வாதியை இழந்துவிட்டோம் - கிழக்கு முதலமைச்சர் இரங்கல்


அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைந்தேன்.  அந்நாரின் இழப்பில் துயருறும் அவரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், ஆதரவாளார்கள் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது இரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மர்ஹூம் அஸ்வர் ஹாஜியின் இழப்பு தொடர்பில் தனது இரங்கலில் மேலும் தெரிவித்துள்ளதாவது.. 


 மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருந்தகையை இலங்கை வாழ் மக்கள் இழந்துள்ளனர்.   மர்ஹூம் அஸ்வர் இலங்கையின் இரு பெரும் தேசியக் கட்சிகளில் இடம் பிடித்து அங்கெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்ததை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. 

அன்னார் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் எமது சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவைகள் என்றும் அழியாதவை.

மர்ஹூம் அஸ்வர் 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாச அரசாங்கத்தில் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் சென்றார். பின்னர் 1994  மற்றும் 2010 ஆம் ஆண்டு ஆகியவற்றிலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். அதன்போது முஸ்லிம் சமய கலாச்சார இராஜாங்க அமைச்சராக  இருந்து சிறந்த பணியாற்றினார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு தென்னிலங்கைக்கு வந்த முஸ்லிம் அகதிகளுக்கு  இவர் பெருமனங்கொண்டு உதவிகள் செய்வித்தார்.

மர்ஹூம் அஸ்வர் தன்னுடைய முதுமையின் இறுதிக் காலங்களிலும் சமூகத்தின் விடிவுக்காய் சதா உழைத்து மக்கள் மனங்களில் சிறந்த முறையில் இடம்பிடித்தார். அன்னாரின் நற் கருமங்களை இதயத்தில் பொருந்தி மாட்சிமை மிகு மறுமை வாழ்வுக்காய் பிரார்த்திப்பதே நாம் அவருக்குச் செய்யும் உன்னதமான நன்றிக்கடனாகும். இவர் எம்மை விட்டு பிரிந்திருக்கும் இவ்வேளை அந்நாரின் அனைத்து நற் கருமங்களையும் ஏற்று அந்நாருக்கு ஜென்னத்துல் பிர்தெளஸ் என்னும் சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது இரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Previous Post Next Post