குற்றவாளிகளுக்கு ஆதரவாக பொலிஸார் செயற்படுகின்றனர் என்ற மக்களின் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான கலந்துரையாடலொன்று முதலமைச்சர் தலைமையில் நேற்று(15) அவருடைய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள்
கலந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்தபோதே முதலமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
"குற்றவாளிகளுக்கு நெருக்கமாக பொலிஸார் செயற்பட்டு, அப்பாவி மக்களை தொந்தரவுக்கு உட்படுத்துவதாக மக்கள் மத்தியில் கருத்தொன்று நிலவுகிறது. முறைப்பாடுகள் செய்யச் செல்லும்போது தாம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் நினைப்பது துரதிஷ்டமானது.
பொலிஸ் படை என்பது, சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்களுக்கான படையல்ல. சட்டம் ஒழுங்கை சகலருக்கும் சமமாக நிலைநாட்ட வேண்டும்" என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். பொலிஸார் தமது உரிமைகளைப் பாதுகாத்து, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
யுத்த காலத்தில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
வடக்கில் நியமனம் பெற்றுவரும் பொலிஸார் தண்டனைக்காக இடமாற்றம் பெறுகின்றனர். இவர்கள் தமது சொந்த பொலிஸ் நிலையங்களுக்குத் திரும்பும்வரை காலத்தை கழிப்பதற்கே விரும்புகின்றனர். இந்த நிலைப்பாடும் மாற்றப்பட வேண்டும் என்றார்.
அண்மையில் பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.