Top News

புதிய தடைகள் விதிக்கப்படாது , கத்தார் மீது

 வளைகுடா நாடான கத்தார் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடர்வதாகவும், மேலும் சில தடைகள் விதிக்கும் திட்டமில்லை எனவும் சவூதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன. இவற்றில் அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் செல்வதற்கான அனைத்து வழி போக்குவரத்தையும் மூடிவிட்டன.

குறிப்பாக கத்தார் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அந்நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்வதையும் தடை செய்துள்ளன. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்க குவைத் மற்றும் துருக்கி முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூடிப்பேசி, எட்டு வார காலமாக நடந்து வரும் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.பனாமா நகரில் கூடிய அரபு நாடுகளின் கூட்டணி இப்போதிருக்கும் தடைகளை தொடர்வது என்றும் அதேசமயம் புதிய தடைகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறுகின்றன. ஆனால், கத்தார் நாடு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரபு நாடுகளின் கூட்டணிகள் நிபந்தனை விதிக்கின்றன.

Previous Post Next Post