கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரசாயனவியல் விஞ்ஞான பாடம் -2017, பகுதி இரண்டு வினாத்தாளினை பரீட்சை இடம்பெறும்போதே நவீன தொலைத்தொடர்பு கருவியினைப் பயன்படுத்தி மண்டபத்துக்கு வெளியில் அனுப்பி, கேள்விகளுக்கான விடைகளை எழுதியதாக கூறப்படும் கொழும்பு பிரபல பாடசாலையின் மாணவன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (23) கைது செய்தனர்.
அவருடன் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மாணவனின் தந்தையான நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் வைத்தியரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சந்தேக நபரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2017 இன் இரசாயனவியல் விஞ்ஞான பாட வினா பத்திரத்தின் பகுதி இரண்டில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை கம்பஹா மகளிர் பாடசாலை ஒன்றின் முன்பாக விநியோகித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் போதே இவ் விருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மகனுக்கு இரசாயனவியல் கேள்விகளுக்கு விடை சொல்லிக் கொடுக்க, இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர் என்னும் சந்தேகத்தில் தேடப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரமே இந்த வினா பத்திரம் நவீன கருவியைப் பயன்படுத்தி, வட்ஸ்அப் ஊடாக ஆசிரியருக்கு குறித்த மாணவனால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இவ்வாறே குறித்த கேள்விகள் பெறப்பட்டு துண்டுப்பிரசுரம் அச்சிடப்பட்டுள்ளதாக விசாரணை ஊடாக உறுதியாகியுள்ளது. இதனால் பரீட்சைக்கு முன்னதாகவே வினா பத்திரம் வெளியாகவில்லை என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தேடப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியரின் தந்தையையும் சகோதரரையும் துண்டுப் பிரசுரத்தை வினாத்தாளில் உள்ள கேள்விகளுடன் அச்சிட்டு வழங்கிய அச்சக உரிமையாளரையும் கைது செய்து எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ள நிலையிலேயே மேலதிக விசாரணைகளில் இந்த மாணவனையும் தந்தையான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவ்விருவரும் நேற்று இரவு கம்பஹா நீதிவான் டி. ஏ .ருவன் பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்
நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் விஞ்ஞான பாடத்துக்கான வினா பத்திரத்தின் 3 பிரதான கேள்விகள், பரீட்சை நேரத்துக்கு முன்பதாகவே வெளியாகிவிட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பெற்றோர் சிலர் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய உதவி பரீட்சைகள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபரின் நிவாரணப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கவனத்துக்கு குறித்த விவகாரம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவுக்கு அமைய கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன்.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் குறித்த துண்டுப்பிரசுரத்தை விநியோகித்ததாக கூறப்படும் கந்தான, பட்டகம பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 67 வயதான நபர் ஒருவரையும் அவரது 29 வயதான மகன் மற்றும் 42 வயதான அச்சக உரிமையாளர் ஆகியோரைக் கைது செய்தனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் பிரதிப் பணிப்பாளர் சானி அபேசேகரவின் வழி நடத்தலில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, கொழும்பின் பிரபல பாடசாலை மாணவனான குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மகன், பரீட்சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்தாளை ஸ்கேன் செய்யத்தக்க ஒருவகை நவீன கருவியையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்றினையும் எடுத்து சென்றுள்ளான்.
ஏற்கனவே இது திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அம்மாணவன் நவீன கருவியைப் பயன்படுத்தி, வினாத்தாளை மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பியுள்ளார். அதற்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் விடையினை அம்மாணவன் எழுதியுள்ளான். இது தொடர்பில் ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆசிரியர் வட்ஸ்அப் மூலம் பெற்ற வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூன்றினை உடனடியாக தனது மேலதிக வகுப்புக்கு மாணவர்களை ஈர்க்கும் துண்டுப் பிரசுரத்தில், பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே இணைத்து அச்சிட்டு, சகோதரன் உதவியுடன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் ஆறு ஊழியர்களை அவர்கள் நாள் சம்பளம் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவருக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு மாணவனை நேற்று கைது செய்தது.
அத்துடன் தலைமறைவாகியுள்ள மேலதிக வகுப்பு ஆசிரியரை கைது செய்ய அவரது தொலைபேசி பதிவுகள் உள்ளிட்ட பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த குற்றத்துடன் தொடர்புடைய தொடர்பாடல் கருவிகள் சிலவற்றையும், வழங்கப்பட்ட பணத்தில் பெரும்பாலான பகுதியையும் மீட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.