Top News

துன்னாலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தே தீருவோம்! பிரதிப் பொலிஸ்மா அதிபர்


வடமராட்சி துன்னாலைப் பகுதியில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவரையும் கைது செய்யாது விடப் போவதில்லை என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஒரு தடவை மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குமாறு மக்கள் கண்ணீருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரை கோரியிருந்த போதும் எவருக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு எமக்கு அதிகாரமில்லை எனவும் அனைவருக்கும் சட்டம் என்பது சமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொலிஸாரது வாகனங்கள், பொலிஸ் காவலரண் போன்றவை பொதுமக்களால் அடித்துடைக்கப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தையடுத்து இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக விஷேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தொடர்ச்சியாக சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 34 பேரைக் கைது செய்திருந்தனர்.
பொலிஸாரதும் விஷேட அதிரடிப் படையினரதும் தொடர்ச்சியான சுற்றி வளைப்புக்களால் பீதியடைந்த துன்னாலைப் பகுதி பொதுமக்கள் வடக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டிருந்தனர்.
இதன் காரணமாக நேற்றைய தினம் அப்பகுதி மக்களுடன் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ மற்றும் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி ஹெட்டியாராச்சி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சம்பவமானது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரைக் கொலை செய்ததன் காரணமாக உணர்ச்சி வசப்பட்ட மக்களே பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே இந்த ஒரு தடவை அவர்களை மன்னித்து விடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பிரதேச மக்கள் கண்ணீருடன் கூறியிருந்தார்கள்.
இதற்கு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதிலளிக்கையில், நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பொலிஸார் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கு அவ்விரு பொலிஸாரையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளோம்.
அதேபோன்று பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி பொலிஸாரது வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அனைவரையும் கைது செய்தே தீருவோம்.
இச்சம்பவம் தொடர்பாக 100 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை 34 பேரே கைது செய்யப்பட்டுள்ளார்கள். மீதியாகவுள்ள அனைவரையும் கைது செய்வோம்.
ஆனால் இனி முன்னர் இடம்பெற்றது போன்று சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு சாதாரண பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது.
ஆனால் குற்றம் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இச்செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. எவருக்கும் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் எமக்கில்லை.
யாராவது தவறு செய்யவில்லையாயின் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கூறட்டும். அது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.


Previous Post Next Post