அமைச்சர் ரவிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரவேண்டிய தேவையில்லையெனவும், அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவி நிதி அமைச்சராக இருந்தபோது எனக்கு மட்டுமல்ல, சகல முதலமைச்சர்களுக்கும் பிரச்சினை இருந்தது. எது எப்படிப் போனாலும், அவர் இந்தக் குற்றச்சாட்டில் தவறு இழைத்துள்ளார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிகின்றனர்.
ரவி கருணாநாயக்கவின் நிதி அமைச்சுக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி முறி மோசடிக்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தே அமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிர்க் கட்சி கையளித்திருக்கிறது.
தற்பொழுது அமைச்சர் ரவி இராஜினாமா செய்தால், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப் பார்த்ததன் நோக்கம் நிறைவேறும். இதனால், ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருமாறு கோரத் தேவையில்லை.
கூட்டு எதிர்க் கட்சியானது அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் போர்வையில், வேறு நோக்கங்களை நிறைவேற்ற முனைவதாயின் அதற்கு ஒரு போதும் ஸ்ரீ ல.சு.க. இடமளிக்க மாட்டாது எனவும் முதலமைச்சர் நேற்று கூறியுள்ளார்.