நீண்டகாலமாக தீர்க்கப்படாது இழுபறியில் இருக்கும் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் பிரச்சினைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூலம் விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலை வேறோர் இடத்துக்கு இடம்மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கோரிய ஆவணங்கள் அனைத்தும் அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாதிருப்பது பற்றி பிரதமரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை வேறோர் இடத்துக்கு இடம்மாற்றுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்தகால மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலே தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டது. பௌத்தர்களின் புனித பூமியில் பள்ளிவாசல் அமைந்துள்ளதாகவும் அதனை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டுமெனவும் இனவாதிகள் அழுத்தங்களைக் கொடுத்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாகவே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தற்போது பள்ளிவாசலுக்கான புதிய காணியொன்று இனம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பொருத்தமான காணி வழங்கப்பட்டால் பள்ளிவாசலை இடம் மாற்றிக்கொள்வதாக பள்ளிவாசல் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்ந்தும் கால தாமதப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பிரதமரைத் தெளிவுபடுத்தி விரைவுபடுத்தவுள்ளேன் என்றார்.
இதேவேளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடமும் பள்ளிவாசல் விவகாரத்துக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளதாகவும் அவரும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை. எம். சலீம்தீன் தெரிவித்தார்.