(ஆர்.ஹஸன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரி மீனவ கிராமமொன்றை உருவாக்குவது சம்பந்தமாகவும், மஞ்சத்தொடுவாயில் மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையமொன்றை அமைப்பது சம்பந்தமாகவும் ஆராய கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழுவொன்று, மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பில் மாதிரி மீனவ கிராமமொன்றை தாபித்தல் மற்றும் மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்தல் என்பன தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடியிருந்தார்.
பின்னர் அமைச்சர் அமரவீரவின் பணிப்புரைக்கமைய இத்திட்டங்களுக்கான மதீப்பீட்டு அறிக்கைகள் தயார் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இவ்விரு திட்டங்களுக்கான சாத்தியவள அறிக்கையை தயார் செய்வதற்காக கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் உயர் மட்டக்குழுவொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி மட்டக்களப்புக்கு கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இக்குழு, மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையமொன்றை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மஞ்சத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கள நிலவரங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன், பின்னர் மாதிரி மீனவ கிராமம் அமைப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்தவுள்ளது.
இக்குழுவின் சாத்தியவள அறிக்கையை அடுத்து இவ்விரு திட்டங்களும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.