Top News

வவுனியா,வேப்பங்குளம் சமூர்த்தி வங்கியின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட பயனாளிகள்


வவுனியா – வேப்பங்குளம் சமுர்த்தி வங்கியில் இந்த மாத முத்திரைக்கான பணமெடுக்க வந்த மக்களின் பணத்தில் முன்னறிவித்தல் இன்றி 2500 ரூபா கழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் அவர்களிடம் ஏன் பணத்தை கழித்தீர்கள் என வினவிய போது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில்(2015) அனைத்து சமுர்த்திப் பயனாளிகளுக்கும் தலா 2500 ரூபா வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தையே தற்போது கழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில்,
தேர்தல் காலத்தில் பணம் தந்தது உண்மை. ஆனால் கடனடிப்படையிலோ அல்லது திரும்பப் பெறப்படும் எனவோ கூறி அந்தப்பணம் வழங்கப்படவில்லை.
 எம்மிடம் அந்த பணத்தை திருப்பித் தருமாறு பல மாதங்களாக கேட்டு வந்தனர். இருப்பினும் வறுமை காரணமாக அந்தப்பணத்தை மீள வழங்க முடியவில்லை.
இந்த நிலையில், அதை தற்போது ஒரே முறையில் கழித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? அப்படி பணம் கழிக்கப்படுமாக இருந்தால் மாதாந்தம் 500 ரூபா வீதம் கழித்திருக்க முடியுமே என கேட்டுள்ளனர்.
 அது மாத்திரமன்றி குறித்த பணத்தை கழித்ததற்கு எவ்விதமான பற்றுச் சீட்டுக்களும் வழங்கப்படவில்லை எனவும் புத்தகத்திலும் அதை பதிவிடவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் வேப்பங்குள சமுர்த்தி வங்கி முகாமையாளரிடம் வினவிய போது,
அப்போதைய அரசாங்கம் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தலா 2500 ரூபா பணம் வழங்கச் சொல்லியிருந்தது. இருப்பினும் நாங்கள் எமது வங்கிப் பணத்திலிருந்தே அதை வழங்கியிருந்தோம்.
அரசாங்கம் அந்தப்பணத்தை வங்கிக்கு வழங்காத காரணத்தினால் நாம் அதை மக்களின் முத்திரையில் வெட்டுகின்றோம் என தெரிவித்துள்ளார்.








Previous Post Next Post