காத்தான்குடி தபால் நிலையத்தை நவீன வசதிகளைக் கொண்ட தபால் நிலையமாக தரமுயர்த்துமாறு தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மேற்படி விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தபால் மா அதிபருக்கு அமைச்சர் ஹலீம் பணிப்புரை வழங்கியுள்ளார்.
காத்தான்குடி தபால் நிலையத்தை தரமுயர்த்தித் தருமாறு அமைச்சர் ஹலீமிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய அமைச்சர் ஹலீம் இந்த விடயம் சம்பந்தமாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தபால் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1994ஆம் ஆண்டு தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதியமைச்சராக இருந்த போது காத்தான்குடியில் தபால் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போதைய யுத்த கால சூழலில் தபால் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை மாபெரும் வெற்றியாக கருதப்பட்டதோடு, மக்களுக்கு பெரும் பயனுள்ளதாகவும் அது அமைந்திருந்தது.
எனினும், அன்று முதல் இன்று வரை ஒரே தரத்தில் குறித்த தபால் நிலையம் இயங்கி வருகின்றதால் அதனை பயன்படுத்துகின்ற பொது மக்கள், அரச சேவையாளர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, காத்தான்குடி தபால் நிலையத்தை நவீன வசதிகளைக் கொண்ட தபால் நிலையமாக தரமுயர்த்தித் தருமாறு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீமிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பில் தனது கவனத்தை செலுத்திய அமைச்சர் ஹலீம், கோரிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தபால் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.