அபு அலா
அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து நாளை (07) வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபையில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நஸீர் இன்று காலை (06) கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இத்தீர்மாணத்தை நாடளாவிய ரீதியிலுள்ள எல்லா மாகாணங்களும் எதிர்பார்த்த வன்னம் உள்ளதாகவும் இதேபோல் மாகாணத்திலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்த வன்னம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த விவாதத்தின்போது சபையில் ஏற்பட்ட அமளியால் சபையின் நடவடிக்கைகளை தவிசாளர் சந்திரதாச கலபெத்தி அன்றைய தினம் மதிய உணவுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்தார்.
மதிய உணவுக்குப் பின்னர் 2.30 மணியளவில் சபை கூடியபோது சபையில் போதியளவு கோரம் இல்லாமையினால் சபையின் நடவடிக்கைகளை எதிர்வரும் (07) வியாழக்கிழமை வரை தவிசாளர் சந்திரதாச கலபெத்தியினால் ஒத்தி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலைமையில் நாளை (07) கூடவுள்ள மாகாண சபை அமர்வில் குறித்த அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்ற இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நஸீர் மேலும் கூறினார்.