Top News

தீர்ப்பினால் தங்கை வித்தயாவின் ஆன்மா சாந்தியடையும்; இலங்கை நீதித்துறைக்கு நன்றி



யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், உயிரிழந்த மாணவியான வித்தியாவின் குடும்பத்திற்கு ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
மேலும், அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று காலை கூடியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.
தொடர்ந்து, நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்த வழக்கின் குற்றவாளிகளான,
2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,
3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,
4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,
5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,
6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,

8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,
9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கே மரணதன்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடியில் கூடிய நீதாய விசாரணை மன்றின் நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரினால் திறந்த நீதிமன்றத்தில் வைத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பை வாசித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் வித்தியா கொலை வழக்கு நீதாய விசாரணை மன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post