-எம்.வை.அமீர் -
பௌத்த நாடான மியன்மாரிலிருந்து ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை கொலை நிர்க்கதிகளுக்குள்ளாக்கி, அவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி பல நாடுகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருப்பது போல் இலங்கை முஸ்லிம்களுக்கும் இவ்வாறானதொரு நிலையை உருவாக்காது மிகுந்த புத்தி சாதூரியத்துடன் செயற்படவேண்டிய காலகட்டத்தில் இருக்கவேண்டியுள்ளதாக, இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின்கிழக்குமாகாண அமைப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த மியன்மாரில் அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, 80 வீதமான பௌத்தர்கள் வாழ்வதைப்போன்று இலங்கையிலும் சுமார் 70 வீதமான பௌத்தர்கள் வாழ்கின்றனர். மியன்மாரின் ரகையின் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்களது தோற்றம் பழக்கவழக்கங்கள் சமய அடிப்படையெல்லாம் வங்களாதேச நாட்டவர்களை போன்றதாகவே இருக்கின்றது. கல்வி அறிவைப்பொறுத்த்தமட்டில் இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகும்.
இலங்கை முஸ்லிம்களும் பல்வேறு நெருக்குதல்களை சந்திக்கின்றபோதிலும் அவைகளில் அநேகமானவை தீர்க்கப்படுகின்றன. மியன்மார் முஸ்லிம்களுக்கு அந்நாட்டில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு வழங்கப்படாத அநேக உரிமைகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார், உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது. பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மர் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.
சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும்காணப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார். இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ளதுபோன்று அந்த மக்களுக்கு கல்வி உள்ளிட்ட எவ்வகையான உரிமைகளும் வழங்கப்படாததன் காரணமாக அவர்கள் அறிவில் குன்றிய மக்களாகவே காணப்படுகின்றனர். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகும்.
நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெருகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.
15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராளும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.
மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெறும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.
உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.
2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.
அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குறிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குறிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.
உலக நாடுகளில் பல்வேறு தீவிரவாத அமைப்புக்கள் இருப்பதுபோன்று மியன்மாரின் 969 என்ற அமைப்பு அந்நாட்டின் பிரபல்யமான அமைப்பாக கருதப்படுகின்றது. இந்த அமைப்புக்கும் இலங்கையில் உள்ள சில தீவிர அமைப்புக்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் கூறப்படும் இந்த சந்தர்ப்பமானது புறக்கணிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கமுடியாது.
மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதாகவும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கூறிக்கொண்டு நாங்கள் எடுக்கும் சில நகர்வுகள் எங்களைப் பாதிக்கக்கூடியயதாகவோ காலம்காலமாக இலங்கையில் வாழும் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான ஒற்றுமையை சிதைக்கக்கூடியதாகவோ அமையக்கூடாது.
உணர்வுகள் பொதுவானவைகள். மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மற்றும் இன்னல்படுவது தொடர்பான படங்களையோ காட்சிகளையோ நாங்கள் பார்க்கின்றபோது உணர்ச்சிவசப்படுவதுபோன்று அவர்களது இனம் சார்ந்த துறவிகள் கொல்லப்படுவது அல்லது துன்புறுத்தப்படுவது போன்றான படங்களையோ காட்சிகளையோ பௌத்தர்கள் பார்க்கின்றபோது அவர்களும் உணர்ச்சிவசப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இவ்வாறானசூழலில் இலங்கை முஸ்லிம்கள் மிகுந்த அவதானத்துடனும் பொறுமையுடனும் செயற்படவேண்டிய தேவை இருக்கின்றது. மியன்மாரைப்போன்று பெருபான்மையான பௌத்தர்கள் வாழும் நாட்டில் வசிக்கும் எங்களுக்கு எதிராக அவர்களது பார்வை திரும்பிவிட்டால் அல்லாஹ் காப்பாற்றவேண்டும் மிகுந்த சிரமத்தை அடைந்துவிடுவோம். அவர்களுக்கு எல்லைப்பிராந்திய நாடுகள் அடைக்கலம் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன ஆனால் எங்களுக்கு கடலே எல்லையாக இருக்கின்றன.
தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது. 15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.
இன்றைய நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலநிலையை போக்க அரபுநாடுகள் இடைக்கால உதவிகளை வழங்கிவருகின்ற போதிலும் இன்னும் அந்த மக்களின் அவலம் தீரவில்லை . இப்போதைக்கு இலங்கை முஸ்லிம்கள் மியன்மார் மக்களின் ஈடேற்றத்துக்காக பிரத்திப்பதைத்தவிர வேறுவழியில்லை. என்றும் தெரிவித்தார்.